காதல் மனைவி தற்கொலை செய்த துக்கத்தில் கணவர் விஷம் குடித்து சாவு


காதல் மனைவி தற்கொலை செய்த துக்கத்தில் கணவர் விஷம் குடித்து சாவு
x
தினத்தந்தி 10 April 2024 7:25 AM IST (Updated: 10 April 2024 11:55 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் அருகே காதல் மனைவி தற்கொலை செய்த சோகத்தில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குலசேகரம்,

குலசேகரம் அருகே உள்ள மணலோடை புறாவிளை பழங்குடியின குடியிருப்பைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவருடைய மகன் ஜெனிஷ் (வயது25), டிரைவர். 11-ம் வகுப்பு வரை படித்த இவர் சொந்தமாக வாடகை கார் ஓட்டி வந்தார். இவர் கடந்த 2022 -ம் ஆண்டு புறாவிளையை சேர்ந்த ஜெனிஷா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகு ஜெனிஷ் தனது மனைவியுடன் பெற்றோர் வீட்டின் அருகில் தனியாக வீடு கட்டி வசித்து வந்தார். ஜெனிஷா திருநந்திக்கரையில் உள்ள ஒரு தையல் பயிற்சி நிலையத்தில் தையல் பயிற்சிக்கு சென்று வந்தார்.

இதற்கிடையே ஜெனிசுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி ஜெனிஷா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெனிஷா பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி தற்கொலை செய்ததால் ஜெனிஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் அவர் தினமும் அதிக அளவில் மது குடித்து வந்தார்.

இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெனிஷ் கடந்த 7-ந் தேதி வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெனிஷ் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து குலசேகரம் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் ஜெனிஷின் உடலை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவி தற்கொலை செய்த துக்கத்தில் கணவரும் விஷம் குடித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story