வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் கைது
வத்தலக்குண்டு அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
வத்தலக்குண்டு அருகே உள்ள வி.குரும்பபட்டியை சேர்ந்தவர் நடேஷ்குமார் (வயது 38). இவர் தனியார் தொழிற்சாலையில் தொழில்நுட்ப அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வைத்தீஸ்வரி (28). இவர்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது 11 பவுன் நகையும், ரூ.2 லட்சத்துக்கு சீர்வரிசை பொருட்களும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்தீஸ்வரி புகார் ஒன்றை கொடுத்தார். அதில், நடேஷ்குமார், மாமியார் ராஜாத்தி மற்றும் கணவரின் உறவினர்கள் பிருத்திவிராஜ், மணிமேகலை ஆகிய 4 பேரும் தன்னிடம் மேலும் 5 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அதன்பேரில் நடேஷ்குமார், அவருடைய தாயார் ராஜாத்தி உள்பட 4 பேர் மீது போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் நடஷே்குமாரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜாத்தி உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.