'கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது' - சென்னை குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவு


கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது - சென்னை குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவு
x

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என சென்னை குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

பெருநகர சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கழிவுநீர் மேலாண்மை ஒழுங்குமுறை மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் குறித்து தனியார் கழிவுநீர் லாரி இயக்கும் உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என்றும், மீறினால் 2 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், 2-வது முறையாக விதிமீறலில் ஈடுபட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் உரிமம் பெற்ற லாரி உரிமையாளர்கள் மட்டுமே கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுநீரை அகற்ற அனுமதிக்கப்படுவார்கள். உரிமம் பெறாத லாரிகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுநீரை அகற்றுபவர்களை முதன்முறை விதிமீறலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், 2-ம் முறை விதிமீறலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், தொடந்து விதிமீறலில் ஈடுபட்டால் லாரி பறிமுதல் செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்களை ஈடுபடுத்தி இறக்க நேரிட்டால், இழப்பீட்டு தொகை ரூ.15 லட்சத்தை வீட்டு உரிமையாளர் மற்றும் லாரி உரிமையாளர் ஆகியோர் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story