திருத்தணி அருகே பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனிதக் கழிவை பூசியது தொடர்பாக 2 மாணவர்கள் கைது
திருத்தணி அருகே பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனிதக் கழிவை பூசியது தொடர்பாக 2 மாணவர்களை போலீசார் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை மாணவர்கள் பள்ளி வகுப்பறைக்கு உள்ளே செல்லக்கூடாது என்பதற்காக மர்மநபர்கள் வகுப்பறை பூட்டுகளில் அசுத்தத்தை பூசி பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி, மாணவிகள் பயன்படுத்தும் கழிவறை போன்றவற்றை சேதப்படுத்தி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் மாணவர்களின் பெற்றோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வகுப்பறைகள் தூய்மை செய்யப்பட்டு மாணவர்கள் மீண்டும் வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை சத்யா அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் இந்த வழக்கில் அதே பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்ததாவது:-
அந்த பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் படிப்பில் கவனம் செலுத்தாமல் ஊர் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இதனை ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். ஆசிரியர்கள் மீது இருந்த கோபத்தில் மாணவர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு போலீஸ் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.