தேவையில்லாமல் வாய்தா கேட்போருக்கு பெரும் தொகை அபராதம் - கீழ் கோர்ட்டுகளுக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் வாய்தா கேட்போருக்கு பெரும் தொகை அபராதம் விதிக்க வேண்டும் என கீழ் கோர்ட்டுகளுக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
திருவள்ளூர் முன்சீப் கோர்ட்டில் 2004-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வரும் சிவில் வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஒரு வழக்கில் தேவையில்லாமல், சாதாரண காரணத்துக்காக வாய்தா வழங்கப்படுவதால், அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கு இழுத்தடிக்கப்படுவதால், வழக்காடிகள் சொல்ல முடியாத மனவேதனைக்கு உள்ளாகுகின்றனர். எனவே, நேர்மையான காரணத்துக்கு வாய்தா வழங்கும்போது, அந்த காரணத்தை கீழ் கோர்ட்டு நீதிபதிகள் குறிப்பிட வேண்டும்.
எனவே, வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக சாதாரண காரணத்தை கூறி அடிக்கடி வாய்தா கேட்பவர்களுக்கு நீதிபதிகள் பெரும் தொகை அபராதம் விதிக்க வேண்டும். அந்த அபராத தொகையை, வழக்கை நடத்த தயாராக இருக்கும் எதிர் தரப்புக்கு வழங்க வேண்டும்.
மேலும், மாவட்ட அளவிலான கோர்ட்டுகளில் ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. எனவே, இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிடுவதற்கு முன்பு, தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. ஒருவேளை விரைவாக விசாரிக்க உத்தரவிட்டால், மாவட்ட அளவிலான கோர்ட்டு நீதிபதிகளுக்கு வேலை பளுவின் அழுத்தம் அதிகரிக்கிறது.
அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட வழக்குகளை விரைவாக விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிடும்போது, ஏழை மற்றும் சமுதாயத்தில் பின்தங்கியவர்கள் தொடர்ந்த வழக்குகளின் விசாரணை பாதிக்கப்படுகின்றன என்று பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. யாருக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ செயல்படக்கூடாது என்பது தான் கோர்ட்டுகளின் நோக்கம்.
அதேநேரம், பொதுநோக்கம் உள்ள வழக்கு உள்ளிட்ட உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே அந்த வழக்குகளை விரைவாக விசாரித்த உத்தரவிட முடியும். எனவே, காரணம் இல்லாமல் வழக்கை விரைவாக விசாரிக்க உத்தரவிட முடியாது.
மேலும், மாவட்ட அளவிலான கோர்ட்டுகளில் உள்ள நீதிபதி தங்களுக்கு சாதகமாக இல்லை என்று தெரியவந்தால், வழக்கை இழுத்தடிக்க வாய்தா பெறுகின்றனர். மறைமுகமாக, சட்டவிரோதமாக ஒரு நோக்கத்தை அடைய விரும்பு நபர்கள், அது நிறைவேறும் வரை, வழக்கை இழுத்தடிக்க பல்வேறு தந்திரங்களை மேற்கொள்வார்கள்.
அதுபோன்ற செயல்களை எல்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதேநேரம், குறித்த காலத்துக்கள் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதை மாவட்ட அளவிலான கோர்ட்டுகளின் நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.