பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பது எப்படி?
பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பது எப்படி? என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.
துவரங்குறிச்சி:
பேரிடர் மேலாண்மை நாளையொட்டி திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த அய்யனார் கோவில் பட்டியில் உள்ள கருந்தம்பாடி குளத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பது எப்படி? என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதேபோல் தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, தீவிபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஒத்திகையை தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர். அப்போது பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் இருக்கும் சாக்குப்பை, பெட்ஷீட்டை வைத்தே ஸ்டெச்சர் போன்று ஏற்படுத்தி எப்படி தூக்கி செல்ல வேண்டும். குடியிருப்பு பகுதிக்குள் வரும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களை தீயணைப்பு துறை உதவியுடன் துன்புறுத்தாமல் பிடித்து வனப்பகுதியில் விடுவது எப்படி? வீட்டில் உள்ள தெர்மாகோல், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட வீணான பொருட்களின் மூலம் தண்ணீரில் மூழ்காமல் தப்பித்து கொள்வது எப்படி? என்பது தொடர்பாக செய்முறை விளக்கத்துடன் ஒத்திகை செய்து காட்டினர். அதேபோல் தீவிபத்து ஏற்பட்டால் முதலில் தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் தீயணைப்புதுறை சார்பில் பயன்படுத்தும் பொருட்கள் என்னென்ன? அதன் பயன்பாடுகள் குறித்தும் விளக்கினர். இந்த நிகழ்ச்சியில் மருங்காபுரி தாசில்தார் செல்வம் (பொறுப்பு) உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.