சாத்தான்குளம் வழக்கு விசாரணையை முடிக்க எவ்வளவு அவகாசம் தேவை? சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி


சாத்தான்குளம் வழக்கு விசாரணையை முடிக்க எவ்வளவு அவகாசம் தேவை? சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணையை முடிக்க எவ்வளவு கால அவகாசம் தேவை என சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்களை கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு தந்தை-மகன் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது. இந்த இரட்டைக்கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

ஐகோர்ட்டில் மனு

இந்த வழக்கு மதுரை முதலாவது செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதால் இந்த வழக்கை விசாரித்து முடிக்க மதுரை ஐகோர்ட்டில், மாவட்ட கோர்ட்டு அவகாசம் பெற்று இருந்தது. இந்த அவகாசத்தை மேலும் சில மாதங்கள் நீட்டித்து உத்தரவிடக்கோரி மதுரை மாவட்ட முதலாவது செசன்சு கோர்ட்டு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையில், இன்னும் 7 சாட்சிகளிடம் சாட்சியம் பெற வேண்டி விசாரணை செய்ய உள்ளது என சி.பி.ஐ. தரப்பு வக்கீல் தெரிவித்தார். இந்தநிலையில் இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

எழுத்துப்பூர்வ பதில்

அப்போது நீதிபதி, இந்த வழக்கில் மேலும் எத்தனை சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டும், எவ்வளவு கால அவகாசம் தேவை என்பது குறித்து எழுத்து பூர்வமாக, சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story