'விஜயதாரணி எத்தனை முறை தொகுதிக்கு வந்துள்ளார்?' - காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கேள்வி
தொகுதிக்கு வராமலேயே காங்கிரஸ் குறித்து விஜயதாரணி விமர்சிப்பதாக விஜய் வசந்த் எம்.பி. கூறியுள்ளார்.
ராமநாதபுரம்,
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருந்தவர் விஜயதாரணி. இவர் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 3-வது முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வசந்தகுமார் எம்.பி. மறைந்ததை அடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் விஜயதாரணி போட்டியிட முயற்சித்ததாக பேசப்பட்டது. எனினும், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு அந்த இடம் வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அன்று முதல் கட்சி தலைமை மீது விஜயதாரணி அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்பட்டது. மேலும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் வழங்க வேண்டும் என்று அவர் காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், காங்கிரஸ் தலைமை அதற்கு இசைவு கொடுக்கவில்லை எனவும் இதனால் விஜயதாரணி கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாகவும் பேச்சு எழுந்தது. இந்நிலையில் கடந்த 24-ந்தேதி மத்திய இணை மந்திரி எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்தார். இதையடுத்து விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் தொகுதிக்கு வராமலேயே காங்கிரஸ் குறித்து விஜயதாரணி விமர்சிப்பதாக காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ராமநாதபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தொகுதிக்கு வந்தால்தான் எவ்வளவு வேலை இருக்கிறது என்பது தெரியும். விஜயதாரணி எத்தனை முறை தனது தொகுதிக்கு வந்துள்ளார்? தொகுதிக்கே வராதவர் தற்போது பா.ஜ.க.விற்கு சென்று மற்றொரு பதவியை கேட்கிறார்" என்று தெரிவித்தார்.