சென்னை ஐ.ஐ.டி.யில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு: இயக்குனர் தகவல்
உலகம், சர்வதேசம், தேசிய அளவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றிருந்தால் அதற்கென்று புள்ளிகள் வழங்கப்படும் என்று ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை ஐ.ஐ.டி.யில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி கலந்து கொண்டு, பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
ஐ.ஐ.டி. வரலாற்றில் முதல் முறையாக விளையாட்டு பிரிவு மாணவர்களுக்காக இளநிலை படிப்புகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இது தேசிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு 75 சதவீத மதிப்பெண் பிளஸ்-2 தேர்வில் எடுத்திருக்க வேண்டும். ஒரு பாடத்துக்கு 2 இடங்கள் இப்போது ஒதுக்கி உள்ளோம். உலகம், சர்வதேசம், தேசிய அளவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றிருந்தால் அதற்கென்று புள்ளிகள் வழங்கப்படும். இந்த புள்ளிகளும் மாணவர் சேர்க்கையில் கணக்கில் கொள்ளப்படும்.
ஜே.இ.இ. மெயின், அட்வான்ஸ்டு தேர்வு மூலமும், மேற்சொன்ன புள்ளிகள், 'வெயிட்டேஜ்' அடிப்படையிலும் தரவரிசை பட்டியல் வெளியிட்டு, இடங்களை நிரப்புவோம். ஜே.இ.இ. 'அட்வான்ஸ்டு' தேர்வு முடிந்ததும், மாணவர் சேர்க்கை தொடங்கும். அந்த வகையில் 2024-25-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் கிரிக்கெட், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட 13 விளையாட்டுகளில் சிறந்தவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 2 அல்லது 4 ஆண்டுகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்படும் என நம்புகிறோம்.
மருத்துவத்தையும், தொழில்நுட்பத்தையும் எப்படி இணைத்தோமோ, அதேபோல் விளையாட்டையும், தொழில்நுட்பத்தையும் இணைக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இதில் விளையாட்டு வீரர்கள் அதிகம் பயன் பெற முடியும். இதனால் விளையாட்டு தொழில்நுட்பமும் இந்தியாவில் வளரும். செஸ், தடகள போட்டி சார்ந்த தொழில்நுட்பம் அதிகம் இருக்கிறது. இதற்கு சந்தை அளவில் பெரிய வரவேற்பும் உள்ளது. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகளவில் இருக்கிறது. விளையாட்டு பிரிவில் சேரும் மாணவர்களுக்கு விளையாட்டில் உள்ள அனுபவமும், தொழில்நுட்பத்தில் தரப்படும் அனுபவமும் பல நிறுவனங்களை உருவாக்க அவர்களுக்கு முதல் படியாக அமையும்.
ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் 7, 8-ம் வகுப்புகளுக்கு பிறகு விளையாட்டு மைதானத்துக்கே செல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதனை மாற்றும் நோக்கில், விளையாடினாலும், விளையாட்டு பிரிவு மூலமும் ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சி பெற்றாலே ஐ.ஐ.டி.யில் சேர முடியும் என்பதை கொண்டு வந்துள்ளோம்.
விளையாட்டு பிரிவில் சேரும் மாணவர்களுக்கு இங்கு என்ன மாதிரியான படிப்புகள் வழங்குவார்கள் என்ற கேள்வி எழும். அதற்காக விளையாட்டு ஆய்வு மையம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். விளையாட்டு சார்ந்த படிப்புகளையும் தொடங்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.