போலீஸ் நிலையங்களில் கேமரா பதிவுகளை எத்தனை நாட்கள் சேமிக்க முடியும்?- ஐகோர்ட்டு கேள்வி


போலீஸ் நிலையங்களில் கேமரா பதிவுகளை எத்தனை நாட்கள் சேமிக்க முடியும்?- ஐகோர்ட்டு கேள்வி
x

மதுரை மாநகர போலீஸ் நிலையங்களில் உள்ள கேமராக்களின் பதிவுகளை எவ்வளவு நாட்கள் சேமித்து வைக்க முடியும் என்ற விவரத்தை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


மதுரை மாநகர போலீஸ் நிலையங்களில் உள்ள கேமராக்களின் பதிவுகளை எவ்வளவு நாட்கள் சேமித்து வைக்க முடியும் என்ற விவரத்தை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

காண்டிராக்டர் கைது

மதுரை பை-பாஸ் ரோடு பகுதியை சேர்ந்த கதிர் திலகர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் அரசு பணிகளை செய்யும் முதல் நிலை காண்டிராக்டராக உள்ளேன். நகை வியாபாரி ஒருவர், என் மனைவியிடமும், அவர் நடத்தி வரும் மகளிர் குழுவை சேர்ந்தவர்களிடமும் சுமார் 6 கிலோ நகைகளை கொடுத்து ஏமாந்ததாக கூறி, மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அதுகுறித்து விளக்குத்தூண் போலீசார் என்னிடம் விசாரித்தனர். அந்த சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று கூறியதை ஏற்கவில்லை.

உன் மனைவியிடம் இருந்து 3 கிலோ நகைகளை வாங்கிக்கொடு என மிரட்டி, 20.4.2023 அன்று காலையில் இருந்து இரவு வரை போலீஸ் நிலைய அறையில் அடைத்து வைத்தனர். தனியார் வங்கிக்கு என்னை அழைத்து சென்று என் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்தையும் பெற்றனர். பின்னர் என்னை சிறையில் அடைத்துவிட்டனர். 54 நாட்கள் சிறையில் இருந்து, ஜாமீனில் வெளியே வந்தேன். விளக்குத்தூண் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் 20.4.2023 அன்றைய தினம் போலீஸ் நிலையம், தனியார் வங்கியில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

கேமரா சேமிப்பு விவரம்

இந்த வழக்கு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.எம்.ஏ. ஜின்னா ஆஜராகி, சம்பவத்தினத்தன்று வீடியோ பதிவுகளை கேட்டபோது, விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் 12 நாட்கள் மட்டுமே அந்த பதிவுகள் இருக்கும் என்றனர்.

இது, 18 மாதங்களுக்கு போலீஸ் நிலைய கேமரா பதிவுகளை சேமிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிரானது என வாதாடினார். விசாரணை முடிவில், மதுரை மாநகர போலீஸ் நிலையங்களில் உள்ள கேமராக்களின் பதிவுகளை எத்தனை நாட்கள் சேமித்து வைக்க முடியும்? என்ற விவரத்தை போலீஸ் கமிஷனர் அலுவலக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.


Next Story