பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்படி?
நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்போடு திரைக்கு வந்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
'பொன்னியின் செல்வன்'
மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் கடந்த 30-ந் தேதி வெளியானது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் ஆனது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியிருக்கிறது. மேலும், ஒட்டுமொத்தமாக 'பொன்னியின் செல்வன்' உலக அளவில் ரூ.80 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை காண பெரம்பலூர்- அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் திரையரங்கை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் தெரிவித்த கருத்து விவரம் வருமாறு:-
தமிழரின் பெருமையை பேசும் நாவல்
பெரம்பலூரை சேர்ந்த அருண்:- 5 பாகங்கள் கொண்ட இந்த கதையில் உள்ள முதல் 2 பாகங்களை இப்படத்தில் சுருக்கி, அதேசமயம் அதை ரசிக்கும் படியும் கொடுத்து இந்தியாவையே திரும்பி பார்க்க செய்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். தமிழரின் பெருமையை பேசும் இந்த நாவலை படமாக்கிய விதத்தையும் தாண்டி ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்குள் இருக்கும் உணர்ச்சிகளை சரியான விகிதத்தில் காட்சிப்படுத்தி ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்துள்ளார்.
தமிழ் ரசிகர்களின் ஏக்கம்
வினோத்:- தெலுங்கு சினிமாவில் இருந்து பாகுபலி, கன்னட சினிமாவிலிருந்து கே.ஜி.எப். போன்ற படங்கள் இந்தியாவையே திரும்பி பார்க்க செய்து தென்னிந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. அந்த சமயம் தமிழில் இப்படி ஒரு படம் எப்போது வெளியாகும் என்று தமிழ் ரசிகர்களுக்கு ஏக்கமாக இருந்தது. தற்போது அந்த ஏக்கத்தை மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன்-1 தீர்த்து வைத்தது மட்டுமில்லாமல் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.
இந்த படத்தின் 2-ம் பாதியில் சற்று ஆங்காங்கே அயற்ச்சி ஏற்படுவது மட்டும் படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருந்தாலும் கதையின் ஓட்டம் இதை மறுக்கடித்த செய்து விடுகிறது.
கதாப்பாத்திர தேர்வு
காயத்ரி:- இப்படத்தின் மிகப்பெரிய பலமே கதாப்பாத்திர தேர்வு தான். இதில் நடித்த அனைத்து நடிகர்களுமே அந்தந்த கதாபாத்திரமாகவே மாறி சிறப்பான நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளனர்.
பிராங்க்ளின்:- நாவலை பற்றி ஓரளவு படித்து தெரிந்து கொண்டு எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் படத்தை காண திரையரங்குக்கு சென்றால் பொன்னியின் செல்வன் படம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். சிறுவர்களுக்கு இந்த வரலாற்று நாவல் திரைப்படம் தனது கண்களுக்கு முன்பாக நேரில் நடந்தது போல் இருக்கும். படத்தில் சில காட்சிகளில் தெளிவாக ஒளிப்பதிவு இல்லை. ஐஸ்வர்யா, திரிஷாவை திரைப்படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள்.
இசை
சுபஸ்ரீ:- ஆண்களுக்கு இணையான முக்கியத்துவம் பெற்ற பெண்கள் கதாபாத்திரங்களும் இப்படத்தின் நாயகர்களாக ஜொலித்துள்ளனர். குறிப்பாக வழக்கமான நாயகிகளாக இல்லாமல் மன வலிமையில் சிறந்தவர்களாக இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நன்றாக இசை அமைத்துள்ளார். அவருடன் இசையமைப்பாளர் இளையராஜாவும் சேர்ந்து இசை அமைத்திருந்ததால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.