பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்; இல்லத்தரசிகள் கருத்து


பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்; இல்லத்தரசிகள் கருத்து
x
தினத்தந்தி 11 July 2023 9:00 PM GMT (Updated: 11 July 2023 9:00 PM GMT)

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவது குறித்து இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், வயல்வெளிகளில் வேளாண் பணிகளில் ஈடுபடும் தாய்மார்கள், மீனவ மகளிர்கள், கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்கள், சிறிய கடைகள் மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்துக்கு பணிபுரியும் பெண்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் ரூ.1,000 கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இத்தகைய திட்டம் அமல்படுத்தப்பட்டது இல்லை. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதற்கு "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்" என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

ரூ.7 ஆயிரம் கோடி நிதி

இந்த புதிய திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து உள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்து வெளியிட்டு உள்ளது.

அதில் பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில்தான் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று பல்வேறு பொருளாதார தகுதிகளும் வரையறுத்து வெளியிடப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்காக நடப்பு நிதி ஆண்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்கள் இதற்கான பணிகளை தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு ரேஷன் கடை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களில் எத்தனை பேர், மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு தகுதியானவர்கள் என்பதை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்தநிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து பெண்கள் என்ன சொல்கிறார்கள்? என்று சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

பெண்களின் பொருளாதார வளர்ச்சி

பழனியை சேர்ந்த தையல் தொழிலாளி அருணாதேவி:- பெண்களுக்கான சமூக வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலவச பஸ் பயணம், கல்லூரி பெண்களுக்கு புதுமைப்பெண் திட்ட உதவித்தொகை என அனைத்தும் பெண்களுடைய கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்ளது. அந்த வரிசையில் பெண்களுக்கான உரிமைத்தொகை என்பது அவர்களுடைய பொருளாதார வளர்ச்சிக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும். ஏனெனில் வேலை செய்யும் பெண்களுக்கு இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும். இந்த உதவித்தொகை தகுதியுள்ள அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாரும் விடுபடாமல் வழங்குங்கள்

திண்டுக்கல் காந்தி மார்க்கெட் அருகே மாம்பழ வியாபாரம் செய்யும் மூதாட்டி செல்வவள்ளி:- எனது கணவர் கலியமூர்த்தி (76) வயது முதிர்வால் வீட்டில் இருக்கிறார். மேலும் கணவரை இழந்த எனது மகள், அவருடைய குழந்தை ஆகியோரும் என்னுடன் இருக்கின்றனர். நாங்கள் 4 பேரும் வாடகை வீட்டில் வசிக்கிறோம். மாம்பழ வியாபாரத்தில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் 4 பேரும் வாழ்ந்து வருகிறோம். எங்களை போன்று பல குடும்பங்கள் வாழ்க்கையை நகர்த்த முடியாமல் தவித்து கொண்டிருக்கிறது. தள்ளாத வகையிலும் பெண்கள் குடும்பத்துக்காக உழைத்து கொண்டிருக்கின்றனர். அதுபோன்ற பெண்களுக்கு கண்டிப்பாக உரிமைத்தொகை வழங்க வேண்டும். ஏழ்மையில் தவிக்கும் யாரும் விடுபடாமல் சரியாக கணக்கெடுப்பு நடத்தி உரிமைத்தொகை வழங்கினால் திட்டத்தின் நோக்கம் முழுமையாக வெற்றிபெறும். அதை அரசு சரியாக செயல்படுத்த வேண்டும்.

ஏழை குடும்ப தலைவிகள்

திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே பூ விற்கும் பவிலா:- எனக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருக்கிறார். கணவர் கூலி வேலைக்கு செல்கிறார். கூலி வேலையும் தினமும் கிடைப்பதில்லை. கடந்த 5 ஆண்டுகளாக பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்கி அதை கட்டி விற்கிறேன். தினமும் ரூ.200 வருமானம் கிடைப்பதே அரிதாக இருப்பதால் சிரமத்துடன் வாழ்க்கையை சமாளித்து வருகிறோம். என்னை போன்று பல பெண்கள் குடும்ப நலன்கருதி சிறு, சிறு வேலை செய்து வருமானம் ஈட்டுகின்றனர். இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1,000 வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால் உரிமைத்தொகை பெறுவதற்கு பல்வேறு விதிகள் இருப்பதாக கூறுகின்றனர். எத்தனை விதிகள் இருந்தாலும் ஏழை குடும்ப தலைவிகளை ஏமாற்றி விடக்கூடாது. ஏழை பெண்கள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

விலைவாசியை குறைத்தால்...

நத்தத்தை சேர்ந்த குடும்ப தலைவி பிரியர்தஷினி:- உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பல்வேறு சிரமங்களுக்கு நடுவே கணவர், குழந்தைகளுக்காக உழைக்கும் பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும். எனவே உரிமைத்தொகை திட்டம் வரவேற்கத்தக்கது. அதேநேரம் தகுதி உடைய பெண்கள் யாரும் விடுபடாமல் வழங்க வேண்டும். இதுதவிர அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவும் வேலைக்கு செல்லும் குடும்ப தலைவிகளுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தினால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரம் வரை செலவு குறையும். எனவே அதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

ஏமாற்றம்

வேடசந்தூரை சேர்ந்த இல்லத்தரசி திலகவதி:- சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறினார்கள். எனவே அனைத்து பெண்களும் மாதந்தோறும் ரூ.1,000 கிடைக்கும் என்று நம்பி இருந்தனர். ஆனால் தற்போது வெளியாகும் தகவல்களை கேட்டால் ஒருசிலருக்கு மட்டுமே கிடைக்கும் போல் தோன்றுகிறது. இதனால் என்னை போன்று பலரும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். பல பெண்கள் குடும்பத்துக்காக கூலி வேலை, தையல், சிறு வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். அதுபோன்ற பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும். அதன்மூலம் பெண்கள் தன்னம்பிக்கையோடு, இன்னும் அதிகமாக உழைப்பார்கள். எனவே அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிதி உதவி வழங்குவதில் தமிழகம் முதல் இடம்

இந்தியாவுக்கே பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்த பெருமை தமிழகத்திற்கு உண்டு. குறிப்பாக மாதம் தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நாட்டிலேயே முதன் முதலில் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர்தான். 1962-ம் ஆண்டு அவர் முதல்-அமைச்சராக இருந்த போதுதான் முதியோர் உதவித்தொகை திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்தார்.

அப்போது ரூ.20 உதவித்தொகையாக முதியோர்களுக்கு வழங்கப்பட்டது. அதன்பின் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது ஆதரவற்ற விவசாய கூலிகள், உடல் ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கும் மாதம்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டமாக விரிவுப்படுத்தினார்.

அதன்பின் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவியை அதிகப்படுத்தினர். தற்போது இந்த திட்டத்தை நாடு முழுவதும் பல மாநிலங்கள் செயல்படுத்தி வருகின்றன. 2010-ம் ஆண்டு முதல் மத்திய அரசும் இந்த திட்டங்களுக்கு நிதி உதவி அளித்து வருகின்றன.

அதே போல் பெண்களுக்கான திட்டங்களை கொண்டு வருவதிலும், அதனை செயல்படுத்துவதிலும் நாட்டிலேயே தமிழகம் எப்போதும் முதன்மையாக திகழ்கிறது. சொத்தில் சம பங்கு, தொட்டில் குழந்தை திட்டம், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி, கர்ப்பிணி உதவித்தொகை, மோட்டார் சைக்கிள் மானியம், பெண் குழந்தைகளுக்கு நிதி உதவி என சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் செயலுக்கு வந்ததும், அரசு மூலம் மாத உதவித்தொகை பெறுவதில் தமிழகம்தான் முதல் இடத்தில் இருக்கும். ஏனென்றால் தமிழகத்தில் ஏற்கனவே முதியோர், விதவை உள்பட பல்வேறு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சுமார் 32 லட்சம் பேரும், புதுமைப்பெண் திட்டத்தில் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் பேரும் மாத உதவித்தொகை பெறுகின்றனர். பெண்கள் உரிமைத்தொகை மூலம் 1 கோடி பேர் மாதம் ரூ.1,000 பெற உள்ளனர். இது தவிர பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 48 லட்சத்து 90 ஆயிரத்து 91 விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெறுகின்றனர். ஆக மொத்தம் சுமார் 1 கோடியே 83 லட்சம் தமிழர்கள் மாதம் தோறும் உதவித்தொகை பெறுவார்கள். இது மற்ற மாநிலங்களை விட மிக அதிக எண்ணிக்கையாகும்.

45 சதவீத குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை கிடைக்கும்

விவசாயிகளுக்கு நிதி வழங்கும் பிரதமரின் கிசான் சம்மான் திட்டம்தான் நாட்டிலேயே அதிகம் பேருக்கு நிதி உதவி அளிக்கும் திட்டமாக உள்ளது. ஆனால் சதவீத அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தான் முதன்மை திட்டமாக இருக்கப்போகிறது.

ஏனென்றால் நாட்டின் மொத்த மக்கள் தொகை 140 கோடி ஆகும். அதில் 54 சதவீதம் பேர் விவசாயிகள். அதாவது மொத்தம் 76 கோடி விவசாயிகள் உள்ளனர். அவர்களில் 8 கோடியே 90 லட்சம் பேருக்குத்தான் பிரதமரின் கிசான் திட்டத்தில் நிதி உதவி கிடைக்கிறது. அதாவது மொத்த விவசாயிகளில் 11 சதவீதம் பேருக்குத்தான் இந்த நிதி உதவி கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் சுமார் 4 கோடி பெண்கள் உள்ளனர்.

அதில் ரேஷன் கார்டு அடிப்படையில் மொத்தம் 2 கோடியே 24 லட்சம் குடும்ப தலைவிகள் உள்ளனர். அதில் 1 கோடி பேருக்கு அதாவது 45 சதவீதம் பேருக்கு உரிமைத்தொகை கிடைக்க போகிறது. எனவே பிரதமரின் கிசான் திட்டத்தை விட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் முதன்மையாக உருவாகப்போகிறது.

உரிமைத்தொகை விளம்பர பலகை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தங்களுக்கு ரூ.1,000 கிடைக்குமா? என்று பெண்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த திட்டத்தில் பயன்பெற தகுதிகள் தொடர்பாக பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் விளம்பர பலகை வைக்கப்பட்டு இருக்கிறது.


Related Tags :
Next Story