வீடுகள், தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது


வீடுகள், தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது
x

வால்பாறையில் தொடர் கனமழை காரணமாக வீடுகள், தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஒரு வீடு சேதமடைந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறையில் தொடர் கனமழை காரணமாக வீடுகள், தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஒரு வீடு சேதமடைந்தது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இந்தநிலையில் நேற்று வால்பாறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர் மழையால் நடுமலை, வெள்ளிமலை டனல் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் அடிப்படை அணையாக விளங்கும் சோலையாறு அணை நிரம்பியது. அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு வினாடி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சோலையாறு அணையின் பாதுகாப்பு கருதி எப்போது வேண்டுமானாலும், அணை திறக்கப்பட்டு 3 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வருவாய்த்துறை மூலம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்பட்டு உள்ளது. சோலையாறு அணையில் இருந்து தண்ணீர் தானாக வெளியேறும் சேடல்பாதை வழியாக 300 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேறி வருகிறது.

வெள்ளம் சூழ்ந்தது

சேடல்பாதை வழியாக வெளியேறும் தண்ணீர் நீர்வீழ்ச்சியாக ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கனமழை காரணமாக வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் கருப்பசாமி என்பவரின் வீடு சேதமடைந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள உருளிக்கல் எஸ்டேட் தேயிலை தோட்டங்களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்கு தோட்ட தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்க முடியாக நிலை ஏற்பட்டு உள்ளது.

உருளிக்கல் எஸ்டேட் பெரியார் நகர் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து வருவாய்துறை, நகராட்சி நிர்வாகத்தினர், பொதுப்பணித்துறை, போலீஸ்சார், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சோலையாறு அணைக்கு வினாடிக்கு 5,036 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 2 மின் நிலையங்கள் மூலம், மின் உற்பத்திக்கு பின்னர் அணையில் இருந்து 1,678 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.


Next Story