வீடு புகுந்து தங்க, வைர நகைகள் திருட்டு
பெரியநாயக்கன்பாளையம் அருகே வீடு புகுந்து தங்க, வைர நகைகள் திருடப்பட்டது.
பெ.நா.பாளையம்
பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சாமிசெட்டிபாளையம் சார்ஜர் நகரை சேர்ந்தவர் மதியழகன் (வயது 58). நூல் வியாபாரி இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு லாவண்யா, மதுமிதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் லாவண்யா திருமணமாகி கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார். சுமதி தனது மகளுக்கு கொடுப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.2½ லட்சம் மதிப்புள்ள வைரநெக்லசை வாங்கி பீரோவில் வைத்து இருந்தார்.
அந்த நகையை தனது மகளிடம் கொடுப்பதற்காக சுமதி நேற்று முன்தினம் பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதற்குள் இருந்த வைர நெக்லஸ், தங்க சங்கிலி, தங்க நெக்லஸ், மோதிரம், வைரத்தோடுகள் ஆகியவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி கொடுத்த புகாரின் பேரில் பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதில், முகமுடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் வந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த முகமூடி கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு போன நகைகளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.