திருச்செங்கோடு அருகே ஜாக்கிகள் மூலம் வீட்டை 4 அடி தூக்கி உயர்த்திய ருசிகரம்
திருச்செங்கோடு அருகே ஜாக்கிகள் மூலம் வீட்டை 4 அடி தூக்கி உயர்த்திய ருசிகரம்
எலச்சிபாளையம், அக்.10-
திருச்செங்கோடு அருகே ஜாக்கிகள் மூலம் வீட்டை 4 அடி தூக்கி உயர்த்திய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
மாற்று ஏற்பாடு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருேக உள்ள சித்தாளந்தூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருக்கு சொந்தமான 1,200 சதுரடி வீடு சித்தாளந்தூர் அம்மன் குடியிருப்பு பகுதியில் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த வீடு தற்போது அந்த பகுதியில் சாலை உயரம் அடைந்ததால் வீடு சாலை மட்டத்தை விட சுமார் 2 அடி கீழே இறங்கியது. இதனால் மழைக்காலங்களில் சாக்கடை கழிவுநீர் மழைநீருடன் கலந்து வீட்டுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் வீட்டை இடிக்க மனம் இல்லாததால் தங்கவேல் மாற்று ஏற்பாடு குறித்து யோசித்தார். அதன்பேரில் சென்னையை சேர்ந்த ஒரு கட்டிட நிறுவனத்தினர் கட்டிடங்களை இடிக்காமல் ஜாக்கி மூலம் தூக்கி உயர்த்தி அல்லது வேறு இடத்தில் வைப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு வீட்டை சுமார் 4 அடி உயர்த்த வேண்டும் என தங்கவேல் கூறினார்.
48 நாட்களில்...
இதையடுத்து 48 நாட்களுக்குள் 4 அடிக்கு வீட்டை உயர்த்தி தர வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் தொடங்கியது. இதனை தொடர்ந்து சதுரடிக்கு 15 பணியாளர்கள் வீதம் 48 நாட்களில் 250 ஜாக்கிகள் கொண்டு வீட்டில் ஒவ்வொரு இடமாக அஸ்திவாரம் வரை அறுத்து அதில் ஜாக்கியை வைத்து உயர்த்தி குறிப்பிட்ட நாட்களுக்குள் 4 அடி உயரம் உயர்த்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இதற்கிடையே வீட்டை தூக்கும் தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று பணிகளை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். லாரியின் டயரை கழற்றி மாற்றுவது போல் வீட்டை ஜாக்கிகள் வைத்து உயர்த்திய ருசிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.