குறைந்த செலவில் ஏழைகளின் பசிபோக்கும் அம்மா உணவகங்கள்


குறைந்த செலவில் ஏழைகளின் பசிபோக்கும் அம்மா உணவகங்கள்
x

குறைந்த செலவில் ஏழைகளின் பசிபோக்கும் அம்மா உணவகங்களில் சேவையை மேம்படுத்த வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மதுரை


தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஏழை, எளியோருக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் வகையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழகம் முழுவதும் பெருநகரங்களில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. இங்கு ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவறை ரூ.5-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

வரவேற்பு

இதனால் அம்மா உணவகங்களுக்கு அமோக வரவேற்பு ஏற்பட்டது. இதனால் ஒவ்வொரு நகரத்திலும் பல்வேறு கிளைகள் தொடங்கப்பட்டன. கூலித் தொழிலாளிகள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள் போன்ற பெருவாரியான மக்கள் கூட்டம் அம்மா உணவகங்களில் அலைமோதின.குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பகுதியினருக்கும் உணவு அளித்ததில் அம்மா உணவகங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

சென்னை, மதுரை என அனைத்து நகரங்களிலும் படித்தவர்களும், போதுமான வருமானம் ஈட்டியவர்களும் கூட, அம்மா உணவகங்களில் விற்பனையான குறைந்த விலை உணவுகளை ருசிக்க தவறவில்லை.ஆனால் சமீபகாலமாக அம்மா உணவகங்களில் 10 ஆண்டுக்கு முன்பிருந்த செயல்பாடுகள் தற்போதும் உள்ளனவா என்ற கேள்வி பலதரப்பட்டவர்களிடம் எழுந்து உள்ளது.

இதுகுறித்து அம்மா உணவக வாடிக்கையாளர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-மதுரை ஆத்திகுளம் காந்திரபுரம் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் வாடிக்கையாளர் ராமர்: பல ஆண்டுகளாக காந்திபுரம் அம்மா உணவகத்தில் காலை, மதிய வேளைகளில் உணவு சாப்பிடுகிறேன். குறைந்த விலையில் காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கப்படுகின்றன.

தரமான உணவு

தற்போது இருப்பதைக்காட்டிலும் கடந்த ஓராண்டுக்கு முன்பு சுவையான, தரமான உணவு வழங்கப்பட்டது. இப்போது அதுபோல இல்லை. ஏற்கனவே இருந்ததைப்போல, நல்ல உணவுகளை வழங்கினால் என்னைப் போன்றவர்கள் பயன்பெறுவார்கள்.

சத்திரப்பட்டி புளியம்மாள் (பழ வியாபாரி): எங்கள் கிராமத்தில் இருந்து நாள்தோறும் பழம் விற்பதற்காக நகருக்கு வருகிறேன். குறைந்த வருமானத்தில் பிழைக்கிறேன். வீட்டில் இருந்து காலையில் புறப்பட்டால் மீண்டும் இரவில்தான் வீடு சென்று சேருவேன். மதியம் ஓட்டலில் 50 ரூபாய், 100 ரூபாய் கொடுத்து சாப்பிடுவதற்கு போதுமான வருமானம் இருக்காது. எனவே மதிய உணவுக்காக காந்திபுரம் அம்மா உணவகத்திற்கு வந்துவிடுவேன். 5 ரூபாயில் உணவு கொடுக்கின்றனர். வயிறார சாப்பிட்டுவிட்டு வியாபாரத்தை கவனிக்கச்செல்கிறேன்.

வரப்பிரசாதம்

இதேபோல மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள கோ.புதூர் அம்மா உணவகத்தின் வாடிக்கையாளரான ராஜா கூறியதாவது:- எங்கள் பகுதி கூலித்தொழிலாளர்கள் நிறைந்தது. இங்குள்ள அம்மா உணவகம் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். ஆனால் சமீபகாலமாக முறையாக உணவுகளை இங்கு வழங்குவதில்லை. எங்களைப்போன்ற தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவை தடையின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வேயர்காலனி முனியசாமி: ஓட்டலில் சமையல் வேலை செய்கிறேன். இன்று விடுமுறை என்பதால் சர்வேயர் காலனியில் இருந்து இங்கு வந்து 5 ரூபாயில் கிடைக்கும் சாம்பார் சாதம் சாப்பிடுகிறேன். என்னைப்போன்றவர்களுக்கு அம்மா உணவகம்தான் உதவியாக இருக்கிறது. கொரோனா காலத்தில் சாதம், சாம்பார், ரசம் ஆகியவை மதிய உணவாக கொடுத்தனர். பின்னர் அவை நிறுத்தப்பட்டன. தொடர்ந்து மதியம் சாப்பாடு குறைந்த விலையில் கொடுத்தால் ஏழைகள் பயன்பெறுவார்கள்.

வாழ்வாதாரம்

கோ.புதூர் அம்மா உணவக ஊழியர்கள் கூறியதாவது:- இங்கு 10 பேர் பணியாற்றுகிறோம். உரிய வசதிகள் செய்து கொடுப்பதில்லை. பல நேரங்களில் வாடிக்கையாளர்களுக்காக சொந்த செலவில் வசதிகளையும், உணவையும் கொடுக்கிறோம். மின்சாரம் தடைபட்டாலும், கியாஸ் தீர்ந்து போனாலும் எங்களின் சொந்த பணத்தை செலவழித்து சரிசெய்கிறோம். விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் போன்றவர்கள்தான் அம்மா உணவகங்களில் பணியாற்றுகிறார்கள். இங்கும் வேலையை இழந்தால், எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். அம்மா உணவகங்களை மேம்படுத்தினால் ஏழை, எளியவர்கள் பயன்பெறு வார்கள். காந்திபுரம் அம்மா உணவக ஊழியர்கள் கூறியதாவது: மற்ற அம்மா உணவகங்களில் 12 பேர் வரை பணியாற்றுகின்றனர். இங்கு வெறும் 7 பேர் மட்டுமே உள்ளோம். இதனால் வேலைப்பளு அதிகம். மேலும், மாதந்தோறும் எங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. பல மாதங்களுக்கு ஒருமுறை தான் சம்பளம் கொடுக்கின்றனர். அதுமட்டுமல்ல, இந்த அம்மா உணவகத்தில் சமைப்பதற்கு தேவையான பொருட்களை தடையின்றி வழங்குவதில்லை. இதனால் எங்களின் சொந்த பணத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவை சமைத்து வழங்குகிறோம். தேவை யான பொருட்களை தடையின்றி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story