குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம்
முனீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
அறந்தாங்கியில் வடக்குவீதியில் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டி, குதிரைகள் வண்டிகள் கலந்து கொண்டன. 4 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 9 ஜோடி மாட்டு வண்டிகளும், கரிச்சான் மாடுகள் பிரிவில் 21 ஜோடி மாட்டு வண்டிகளும், கரிச்சான் குதிரை பிரிவில் 15 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டு எல்லை நோக்கி சீறிப்பாய்ந்தன. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
பரிசு
இதைதொடர்ந்து மாலையில் நடுமாடுபிரிவில் 10 ஜோடி மாட்டு வண்டிகளும், பூச்சிட்டு பிரிவில் 32 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. நடுக்குதிரை பிரிவில் 10 ஜோடி வண்டிகளும் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. குதிரைகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிக்கு கொடிபரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இரு புறங்களிலும் ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டு இருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறந்தாங்கி வடக்கு வீதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.