காந்தி ஜெயந்தியையொட்டி சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிப்பு: கவர்னர் கேடயம் வழங்கினார்
காந்தி ஜெயந்தியையொட்டி கிண்டி ராஜ்பவனில் நடந்த விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி கவர்னர் ஆர்.என்.ரவி கவுரவித்தார்.
சென்னை,
காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை கிண்டி ராஜ்பவனில் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கவர்னர் பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
விழாவில் கவர்னர் பேசும்போது, 'சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பதை பல்வேறு புத்தகங்களின் மூலமாக அறிந்து கொண்டேன். சுதந்திரத்துக்காக ஏராளமான தமிழர்கள் தங்களது இன்னுயிரை இழந்ததையும் அப்போது தெரிந்து கொண்டேன். தமிழகத்தில் அறியப்படாமல் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களை கண்டறிய குழுவை ஏற்படுத்தினோம். இதன்மூலம் ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்களை கண்டறிந்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தியையொட்டி கவர்னர் மாளிகை சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்படுவார்கள்' என்றார்.
பார்வையாளர்களை கவர்ந்த கலை நிகழ்ச்சி
நிகழ்ச்சியில் சகாயராஜ் தலைமையிலான குழுவினர் மகாத்மா காந்தி, சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதியார், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், வ.உ.சிதம்பரனார், வீரமங்கை வேலு நாச்சியார், ஜான்சி ராணி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர் போன்று வேடம் அணிந்து மேடையில் காட்சியளித்து அனைவரையும் கவர்ந்தனர்.
இதுதவிர மரக்கால் ஆட்டம், தோல் பாவை கூத்து, மேளதாள நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை விழாவில் பங்கேற்றவர்கள் ரசித்து பார்த்தனர்.
வாஞ்சையோடு கேட்டார்
முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் இருக்கைக்கு அருகே சென்று கவர்னரும், அவரது மனைவி லட்சுமியும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 105 வயது தியாகி ஏகாம்பரம் உள்ளிட்ட 90 வயதுக்கும் மேற்பட்ட தியாகிகள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது தியாகிகள் சிலர், சுதந்திர போராட்டத்தின்போது நடந்த நிகழ்வுகளை சுட்டிக்காட்டினர். இதை கவர்னர் வாஞ்சையோடு கேட்டார்.
விழாவில் கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக பா.ஜ.க. இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சி
முன்னதாக நேற்று காலை மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ராஜ்பவன் வளாகத்தில் காந்தி மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சியை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில் 91 அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்துக்கு கவர்னர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையத்தின் (சென்னை) கூடுதல் தலைமை இயக்குனர் எம்.அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.