80 வயதை கடந்த மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு


80 வயதை கடந்த மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு
x

முதியோர் தினத்தை முன்னிட்டு 80 வயதை கடந்த மூத்த வாக்காளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை

மூத்த வாக்காளர்கள்

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, 80 வயதை கடந்த மூத்த வாக்காளர்களுக்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து மடல் எழுதியுள்ளார். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 வயதை கடந்த மூத்த வாக்காளர்களுக்கு வாழ்த்து மடல் வந்துள்ளது. இதனை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி 80 வயதை கடந்த மூத்த வாக்காளர்களுக்கு வாழ்த்து மடலை வழங்கி கவுரவித்தார். அதன்பின் அவர் தெரிவித்ததாவது:-

சர்வதேச முதியோர் தினம் அக்டோபர் 1-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு, 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 26 ஆயிரத்து 888 வாக்காளர்கள் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களாக உள்ளனர்.

வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம்

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவிலான பங்கேற்பினை உறுதி செய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையமானது சக்கர நாற்காலிகள், சாய்தள பாதை, தன்னார்வலர்களின் உதவி, இலவச போக்குவரத்து வசதிகள் மற்றும் வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்களித்தல் போன்ற வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிவம் 12 டி நிரப்புவதன் மூலம் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம். இதுபோன்று தேவையான வசதிகளை பயன்படுத்தி வாக்கினை செலுத்தவும், இளம் வாக்காளர்களை அவர்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தனி தாசில்தார் (தேர்தல்) சோனை கருப்பையா, தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story