ஆடி அமாவாசையையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி அமாவாசையையொட்டி  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்  கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி அமாவாசையையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தர்மபுரி

ஆடி அமாவாசையையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. மேலும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தர்ப்பணம்

ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மற்றும் தை அமாவாசை நாட்களில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும். இதனால் அமாவாசை நாட்களில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது உண்டு.

இந்த நிலையில் ஆடி அமாவாசையான நேற்று ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி கரையில் ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பின்னர் பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர். மேலும் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர். இதில் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கூடுவதும் குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் பரிசில் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடிக்கிறது.

முத்தையன் சாமி கோவில்

ஏரியூர் அருகே வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தையன் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று ஆடி அமாவாசை என்பதால் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்தனர். மேலும் சேலம் மாவட்டத்தின் மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், கோட்டையூர், பண்ணவாடி உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் பரிசலில் காவிரி நீர்த்தேக்கத்தை கடந்து கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்தும், மொட்டை அடித்தும், சாமி ஊர்வலத்தின்போது குறுக்கே படுத்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மேல்தோப்பில் அமைந்துள்ள ராமாயி, பொம்மாயி சமேத ஸ்ரீ விரிஞ்சிபுரத்து முனியப்ப சாமி கோவிலில் ஆடி அமாவாசை விழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனையும் உபகார பூஜைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story