ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.
ஒகேனக்கல்
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை எனக்கூறி அம்மாநில அரசு அங்குள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை நாளுக்கு நாள் குறைத்து வருகிறது. அதன்படி 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 674 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. இந்த நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர் அணை
மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. இந்த மழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 938 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்தானது நேற்று காலை வினாடிக்கு 3 ஆயிரத்து 367 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.