ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புமேட்டூர் அணைக்கு 2,862 கனஅடி தண்ணீர் வருகிறது
பென்னாகரம்:
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 862 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 306 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
போலீஸ் ரோந்து பணி
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை அளந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று விடுமுறை நாளில் ஒகேனக்கல் வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் ஊர்க்காவல் படையினர், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டூர் அணை
இதனிடையே மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 723 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 862 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
தற்போதைய நிலையில் அணைக்கு நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டமும் தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது.
நேற்று முன்தினம் 58.19 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 57.94 அடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.