ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூடுதல் தலைமை செயலாளர் சந்திப் சக்சேனா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூடுதல் தலைமை செயலாளர் சந்திப் சக்சேனா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தலைமை செயலாளர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்திப் சக்சேனா நேற்று ஒகேனக்கலில் நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது ஒகேனக்கல் நீரேற்று நிலைய பகுதியில் இருந்து காவிரி ஆற்றில் நீர்வரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கலெக்டர் சாந்தியிடம் கேட்டறிந்தார்.
கண்காணிக்க உத்தரவு
இதைத்தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக வரப்பெற்ற தண்ணீரின் அளவுகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது நீர்வளத்துறை மாவட்ட செயற்பொறியாளர் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சங்கரன், தாசில்தார் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், ரங்கநாதன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மாரியப்பன் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.