திருச்செங்கோட்டில் இந்து முன்னணி 20-ம் நாள் பிரசார பயணம் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்பு
திருச்செங்கோட்டில் இந்து முன்னணி 20-ம் நாள் பிரசார பயணம் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்பு
எலச்சிபாளையம்:
தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரசார பயணம் நடந்து வருகிறது. இந்த பயணத்தின் 20-வது நாளாக திருச்செங்கோடு வந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், உளவுத்துறையின் முக்கிய அதிகாரி மதுரையில் பணியாற்றியபோது 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாஸ்போர்ட் கொடுத்தது தொடர்பாக அவரை பணி மாற்றம் செய்து வேறு மாநிலத்தில் வைத்து விசாரிக்க வேண்டும். தர்மபுரி எம்.பி. அரசு விழாவில் நடந்து கொண்ட விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
இதனை தொடர்ந்து திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் பகுதியில் இருந்து ஊர்வலமாக நடந்து சென்ற அவர் அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி தலைவர் கலைவாணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பாரி கணேசன் கலந்து கொண்டார். இதில் மாநில செயலாளர்கள் தாமு, வெங்கடேசன், சண்முகம், சேவகன், மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.