இந்து முன்னணியினர் சாலை மறியல் முயற்சி; 15 பேர் கைது


இந்து முன்னணியினர் சாலை மறியல் முயற்சி; 15 பேர் கைது
x

இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதையடுத்து 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

ஸ்ரீரங்கம் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இந்து முன்னணியின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு இந்து முன்னணியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் ஈடுபட முயன்றனர். அப்போது, கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், தில்லை நடராஜரை பற்றி பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சுதந்திர தினம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட தி.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இந்து முன்னணி மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ராம.பாலமுருகன், திருச்சி கோட்ட பொறுப்பாளர் குணா, மாவட்ட செயலாளர் ராஜா, துணை தலைவர் ரமேஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்ற 15 பேரை, ஜெயங்கொண்டம் போலீசார் தடுத்து கைது செய்து, அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதையொட்டி ஜெயங்கொண்டம் பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு காமராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி உள்ளிட்ட போலீசார் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story