இந்து கடவுள்களை இழிவாக பேசிய விவகாரம்: விடுதலை சிகப்பி மீதான விசாரணைக்கு தடை
இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக சினிமா உதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி சென்னையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், மலக்குழி மரணம் என்ற தலைப்பில் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி கவிதை ஒன்றை வெளியிட்டு பேசினார்.
இந்த பேச்சு இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், விக்னேஷ்வரன் என்ற விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி விடுதலை சிகப்பி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் நிலையை விளக்கும் வகையிலேயே கவிதை வெளியிட்டதாகவும், மத உணர்வுகளை எந்த விதத்திலும் புண்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விடுதலை சிகப்பிக்கு எதிராக வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து, மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.