அச்சத்தின் உச்சத்தில் மலைக்கிராம மக்கள்


அச்சத்தின் உச்சத்தில் மலைக்கிராம மக்கள்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே கரடு முரடான பாதை, பச்சையாற்றில் வெள்ளம், வனவிலங்குகள் நடமாட்டம் என அச்சத்தின் உச்சத்தில் மலைக்கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

திண்டுக்கல்

மஞ்சனூத்து கிராமம்


பழனியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் காவலப்பட்டி அருகே அமைந்துள்ளது மஞ்சனூத்து கிராமம். இங்கு 14 குடும்பங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் சுமார் 40 பேர் வசிக்கின்றனர். இவர்கள் ஆரம்ப காலத்தில் பழம்புத்தூர், குதிரையாறு அணைப்பகுதியில் தற்காலிக குடிசை அமைத்து நாடோடிகளாக வாழ்ந்தவர்கள் ஆவர்.


கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள், மஞ்சனூத்து பகுதியில் குடிசை அமைத்து தங்கள் வாழ்வை நிரந்தரமாக்கி கொண்டனர். காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தின் 3 பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்துள்ளன. திரும்பி பார்க்கும் திசையெல்லாம் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் மஞ்சனூத்து கிராமத்தில் பசுமை பளிச்சிடுகிறது.


பாதை இல்லாததால் பரிதவிப்பு


எழில் கொஞ்சும் இந்த கிராமத்தில் அடிப்படை வசதி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. குறிப்பாக இந்த கிராமத்துக்கு வந்து செல்ல பாதை வசதி கிடையாது. பாதை இல்லாமல் மலைக்கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர். கரடு முரடான மலைப்பாதை கிராம மக்களின் பாதங்களை பதம் பார்த்து விடுகின்றன.


புதர் மண்டிய அந்த பாதையில் தான், மலைக்கிராம மக்களின் கால்கள் பல ஆண்டுகளாக தங்களது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குண்டும், குழியுமான மலைப்பாதை வழியாக பொந்துப்புளி கிராமத்துக்கு மக்கள் நடந்து வருகின்றனர். அதன்பிறகு அங்கிருந்து நெய்க்காரப்பட்டி, பழனிக்கு மலைக்கிராம மக்கள் செல்வது வாடிக்கையாக உள்ளது.


ஆற்றை கடக்கும் அவலம்


மலைக்கிராம மக்களுக்கு பாதையில் கற்கள் மட்டுமல்ல, பச்சையாறும் குறுக்கிடுகிறது. இவர்களின் நடை பயணத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறது அந்த ஆறு. பொந்துபுளி கிராமத்துக்கு நடந்து செல்லும் வழியில், 3 இடங்களில் பச்சை யாற்றை கடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.


அதிலும் வருண பகவான் கருணை காட்டி, வான்மழை பொழிந்தால் அவ்வளவு தான். அந்த கிராமம் தீவு போல் மாறி விடுகிறது. மழைக்காலத்தில் பச்சையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். இதனால் ஆற்றை கடப்பது மலைக்கிராம மக்களுக்கு பெரிய சவாலாகி விடுகிறது.


அச்சத்தின் உச்சத்தில் மக்கள்


இது ஒருபுறம் இருக்க, மக்கள் நடந்து செல்லும் பாதையில் காட்டுப்பன்றி, செந்நாய், யானைகள் அடிக்கடி உலா வருகின்றன. பாதை, பச்சையாறு, பயமுறுத்தும் வனவிலங்குகள் என இந்த மலைக்கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை அச்சத்தின் உச்சத்திலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது.


குறிப்பாக பெண்கள், குழந்தைகள் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். ஊரை விட்டு ஒதுங்கி தூரத்தில் இருப்பதால், தங்களது துயரம் யாருக்கும் தெரிவதில்லை என்பது மலைக்கிராம மக்களின் புலம்பலாக எதிரொலிக்கிறது. பாதை வசதி இல்லாததால், பலரது படிப்பு பாதியிலேயே முடிந்த வேதனையும் நீங்காத நினைவுகளாய் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-


கடுக்காய், தேன் சேகரிப்பு


பஞ்சம்மாள்:- எங்கள் கிராம பகுதிக்கு பாதையே இல்லாததால், தனித்தீவில் வாழ்வது போல் உணர்கிறோம். ஆற்றை கடந்து செல்லும் நிலை உள்ளதால் குழந்தைகளை பெரும் அச்சத்துடனேயே பொந்துபுளியில் உள்ள பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம். அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்லும்போது யாராவது ஒருவர் உடன் சென்று பள்ளியில் விட்டுவிட்டு வருகிறோம். அதேபோல் மாலையிலும் யாராவது ஒருவர் அழைத்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கள் பகுதியை சேர்ந்த ஆண்கள் மலைக்கு சென்று கடுக்காய், வாரியல் புல், தேன் ஆகியவற்றை சேகரித்து விற்று வந்தனர்.


தற்போது பெரும்பாலானோர் தோட்டத்தில் கூலி வேலைக்கு செல்கின்றனர். ஆனால் பெண்களுக்கு போதிய வேலை இல்லை. எனவே ஊரக வேலை திட்டத்தில் வேலை கொடுத்தால் உதவியாக இருக்கும். இதேபோல் எங்கள் பகுதியை சேர்ந்தவர்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கப்பெறாமல் தவிக்கிறோம். எனவே பாதை வசதி, சாதி சான்றிதழ், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பாதியில் முடிந்த படிப்பு


மூர்த்தி:- ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் சூழ்நிலையிலும் பொந்துபுளியில் 8-ம் வகுப்பு வரை படித்தேன். ஆனால் அங்கிருந்து போதிய போக்குவரத்து இல்லாததால் தொடர்ந்து பள்ளி படிப்பை தொடர முடியவில்லை. இதேபோல் சாதி சான்றிதழ் இல்லாததால் அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதில்லை.


தற்போது எங்கள் பகுதியை சேர்ந்த 7 குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். மழைக்காலம் வந்துவிட்டால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அப்போது பள்ளி செல்ல முடியாது. எனவே எங்கள் பகுதி மாணவர்கள் பள்ளிப்படிப்பை தொடர பாதை, போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.


மலைக்கிராம மக்களின் மனக்குமுறல், அரசு அதிகாரிகளின் செவிக்கு எட்ட வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாக உள்ளது. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.



Next Story