உயர்மட்ட பாலம், இணைப்பு சாலை தண்ணீரில் மூழ்கின: காந்தையாறில் மோட்டார் படகு சேவை தொடங்கியது-பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி


உயர்மட்ட பாலம், இணைப்பு சாலை தண்ணீரில் மூழ்கின:  காந்தையாறில் மோட்டார் படகு சேவை தொடங்கியது-பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உயர்மட்ட பாலம், இணைப்பு சாலை தண்ணீரில் மூழ்கியதையடுத்து ஆற்றை கடக்க காந்தையாறில் மோட்டார் படகு சேவை தொடங்கியது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

உயர்மட்ட பாலம், இணைப்பு சாலை தண்ணீரில் மூழ்கியதையடுத்து ஆற்றை கடக்க காந்தையாறில் மோட்டார் படகு சேவை தொடங்கியது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காந்தையாறு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை அருகே லிங்காபுரம் காந்தவயல் இடையே காந்தையாறு செல்கிறது. இந்த ஆற்றின் மறு கரையில் காந்தவயல், காந்தையூர், உளியூர், மொக்கைமேடு, ஆளூர் ஆகிய மலையடிவார கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் காந்தையாற்றில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படும் போது நடந்து சென்று நகரப்பகுதிகளுக்கு சென்று வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் மழைக்காலங்களில் பவானி ஆறு மற்றும் மாயாறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து நீர்த்தேக்க பகுதியில் வெள்ளம் கடல் போல் சூழ்ந்து நிற்கும். அப்போது போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் பரிசல் மூலம் ஆற்றை கடந்து சென்று வந்தனர். கிராம மக்கள் தங்களுக்கு பால வசதி கோரி நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு ரூ.40 லட்சம் செலவில் காந்தை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் மற்றும் இணைப்பு சாலைகள் கட்டப்பட்டது. உயர்மட்ட பாலம் தொலைநோக்கு பார்வையோடு திட்டமிட்டு கட்டப்படாததால் மழைக்காலங்களில் தண்ணீரில் மூழ்கியும் கோடை காலங்களில் வெளியே தெரிந்தும் பொது மக்களுக்கு சுமார் 6 மாதம் பயன்பாடு இல்லாமல் காணப்பட்டு வந்தது.

தண்ணீரில் மூழ்கியது

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து நீர்த்தேக்க பகுதியில் வெள்ளம் கடல் போல் தேங்கி நிற்கிறது.இதனால் உயர் மட்ட பாலம் மற்றும் இணைப்புச் சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் கிராமமக்கள் பாதிக்கப்பட்டனர். பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை காணப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கிராம மக்கள் மற்றும் மாணவ -மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு கோட்டூர் சிறப்பு நிலை பேரூராட்சி ஆழியார் அணைப்பகுதியில் இருந்து படகு சவாரிக்கு பயன்படுத்தப்பட்ட வந்த மோட்டார் படகு கடந்த 2 தினங்களுக்கு முன்பு லிங்காபுரம் அருகே காந்தையாறு நீர்த்தேக்க பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.

மோட்டார் படகு சேவை

கடந்த 2 தினங்களாக மோட்டார் படகு பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததை யொட்டி மோட்டார் படகு சேவை நேற்று காலை தொடங்கியது. காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பின்னர் சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார் மோட்டார் படகு சேவையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயலாளர் திருமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் சுப்புலட்சுமி, ரங்கராஜ், கே. எஸ். குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் கிராம மக்கள் மோட்டார் படகில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். காலை மாலை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்த மோட்டார் படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. மாணவ- மாணவிகள், வயதானவர்கள் முற்றிலும் இலவசமாக பயன்படுத்த அனுமதி அளிக்கபட்டுள்ள நிலையில் மற்றவர்களுக்கு விரைவில் கட்டணம் பேரூராட்சி சார்பில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தையாற்றை கடக்க மோட்டார் படகு சேவை தொடங்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story