பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்த ஐகோர்ட்டு
கால தாமதத்துடன் மனுத்தாக்கல் செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
சென்னை,
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் வெண்ணிலா. இவரது நியமனத்திற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஒப்புதல் அளிப்பது தொட்ரபாக 8 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அதன் பிறகும் மனுதாரரின் பணி நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதனால் மாவட்ட கல்வி அலுவலருக்கு எதிராக ஏற்கனவே மூன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த நிலையில் 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என 2,148 நாட்கள் கால தாமதத்துடன் மனுத்தாக்கல் செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் தாமதமாக வழக்கு தாக்கல் செய்ததற்காக பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, இந்த தொகையை ஒரு வாரத்தில் சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.