தரமான ஹெல்மெட் விற்பனை செய்யப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்


தரமான ஹெல்மெட் விற்பனை செய்யப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்
x

அனைத்து பகுதிகளிலும் தரமான ஹெல்மெட் விற்பனை செய்யப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

அனைத்து பகுதிகளிலும் தரமான ஹெல்மெட் விற்பனை செய்யப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

விதிமீறல்கள்

பெரும்பாலான சாலை விபத்துகளில் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலையில் ஏற்படும் காயங்களினாலேயே உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க உயிர் காக்கும் கவசமாக செயல்படக்கூடிய தலைக்கவசம் எனப்படும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சின்னச் சின்ன அசவுகரியங்களை கருத்தில் கொண்டு பலரும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது, உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு சாலை விதி மீறல்களுக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அபராதத்துக்குப் பயந்து பலரும் ஹெல்மெட் அணியத் தொடங்கியுள்ளனர். ஆனால் நீண்ட காலமாக போலீசார் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிப்பதில் கெடுபிடி காட்ட வில்லை. இதனால் ஹெல்மெட்களை முறையாக பராமரிக்காமல் விட்டதால் பல வீடுகளில் ஹெல்மெட் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அத்துடன் ஒரு வாகனத்திற்கு ஒரு ஹெல்மெட் மட்டுமே வைத்திருப்பவர்கள் பின்னால் இருப்பவர்களுக்கு புதிதாக ஹெல்மெட் வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தற்போது புதிய ஹெல்மெட்கள் வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

தரமற்றவை

இந்த நிலையில் புற்றீசல் போல சாலையோர ஹெல்மெட் விற்பனையாளர்கள் முளைக்கும் அபாயம் உள்ளது. கடந்த காலங்களில் பல முக்கிய சாலைகளில் ஹெல்மெட் விற்பனை படுஜோராக நடைபெற்றது. ஆனால் அவர்கள் விற்பனை செய்யும் ஹெல்மெட் தரமானதுதானா என்பதை தெரிந்து கொள்வதற்கான எந்த வழிமுறையும் இல்லை. இதனால் கவர்ச்சிகரமான தோற்றத்தை மட்டுமே நம்பி பலரும் ஹெல்மெட் வாங்கும் நிலை உள்ளது. ஆனால் அவ்வாறு வாங்கும் ஹெல்மெட்டுகள் தரமற்றதாக இருக்கும் பட்சத்தில் விபத்துகளின் போது உயிரைக்காக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.

சமீபத்தில் விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் ஒருவர் ஹெல்மெட் உடைந்து தலை நசுங்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற்ற ஹெல்மெட்டுகளை வாங்குவது பாதுகாப்பானது என பலரும் எண்ணுகின்றனர். ஆனால் சில விற்பனையாளர்கள் போலியான ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் ஹெல்மெட்டுகளை விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஒரு சிலர் குறைந்த விலையில் கிடைக்கும் ஹெல்மெட்டுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். தாங்கள் ஹெல்மெட் அணிவது தங்களுக்கு பாதுகாப்பானது என்பதை விட, போலீசாரிடமிருந்து தப்பித்துக் கொள்ள உதவுவது என்ற மனநிலையிலேயே அவர்கள் ஹெல்மெட்களை தேர்வு செய்கிறார்கள்.

அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்

தரமற்ற ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க அதிகாரிகள், அவைகள் விற்பனை செய்யப்படும் சாலையோர கடைகள் மட்டுமல்லாமல், கடைகளில் விற்பனை செய்யப்படும் ஹெல்மெட்டுகளையும் ஆய்வு செய்து அவை தரமானதுதானா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தரமற்ற ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால் அவற்றைப் பறிமுதல் செய்வதுடன் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கவும் வகை செய்ய வேண்டும். அத்துடன் ஹெல்மெட் விற்பனை செய்யும் வணிகர்கள் அவை உயிர் காக்கும் கவசம் என்பதை மனதில் கொண்டு தரமானவற்றை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்'.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story