திருச்சி: ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான விவகாரம் - பலூன் வியாபாரி கைது
ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் பலூன் வியாபாரி அனர் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி,
திருச்சி மெயின்கார்டு கேட் அருகே மேலிப்புலிவார்டு ரோட்டில் நேற்று இரவு 8.10 மணியளவில் ஒருவர் பலூன் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் பலூனுக்கு காற்று நிரப்புவதற்காக வைத்திருந்த ஹீலியம் கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் தூக்கி வீசப்பட்டார். வெடிச்சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர். மேலும் வெடித்த கியாஸ் சிலிண்டர் அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ நசுங்கியது. அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
இந்த விபத்தில் கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற மாட்டு ரவி என்பவர் உயிரிழந்தார். ஹீலியம் கியாஸ் சிலிண்டர் அருகில் நின்று கொண்டு ரவிக்குமார் சிகரெட் குடித்தபோது ஏற்பட்ட தீப்பொறியால், கியாஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயம் அடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் பலூன் வியாபாரி அனர் சிங் தலைமறைவாக இருந்தார். அவரை கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.