தூத்துக்குடியில் பலத்த மழை பள்ளிகளுக்கு விடுமுறை
தூத்துக்குடியில் நேற்று அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
தூத்துக்குடி,
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நாளை (சனிக்கிழமை) தொடங்கக்கூடும் என்றும், தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை மெல்ல மெல்ல குறைந்து நேற்று காலை 8 மணி வரை சாரல் மழையாக நீடித்தது. இதன் காரணமாக சாலைகள், தெருக்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும், காலையிலும் மேகமூட்டத்துடன் மழை பெய்வதற்கான அறிகுறி காணப்பட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
சகதிக்காடாக மாறியது
இந்த மழையால் தூத்துக்குடி நகரில் தெருக்கள், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையம் மழைநீர் தேங்கி சகதிக்காடாக மாறியது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். நகரின் பிரதான சாலையான பாளையங்கோட்டை சாலையில் ஆங்காங்கே மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள அணுகு சாலையில் அதிகளவில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் டூவிபுரம், அண்ணாநகர், சிதம்பரநகர், முனியசாமிபுரம், பிரையண்ட் நகர் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் சாலைகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது.
தண்ணீர் அகற்றம்
இதைத்தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். பிரதான சாலைகளில் தேங்கிய மழைநீர் டேங்கர் லாரிகள் மூலம் மோட்டார்கள் வைத்து உறிஞ்சி வேகமாக அகற்றப்பட்டன. மேலும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் பக்கிள் ஓடையில் இருந்த கழிவுகள் அகற்றப்பட்டு தண்ணீர் வேகமாக வழிந்தோடி கடலுக்கு செல்வதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.