கொட்டி தீர்த்த கனமழை: ஆசனூர் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்
ஆசனூர் வனப்பகுதியில் பெய்த கனமழையால் தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் ஆசனூர் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வபோது விட்டு விட்டு மழை பெய்துவருகிறது.
இந்நிலையில் இன்று மதியம் மேகமூட்டம் சேர்ந்து தூரல் ஆரம்பித்து. பின்னர் பலத்த மழையாக பெய்தது. குளியாடா, தேவர்நத்தம், கோட்டாடடை, மாவள்ளம், ஓசட்டி, மற்றும் வனப்பகுதியில் 12 மணிமுதல் 1 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது.
ஆசனூர் வனப்பகுதியில் பெய்த கனமழையால் ஆசனூர் அருகே உள்ள அரேபாளையம் தரை பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது.
இதனால் ஆசனூர் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் செல்லும் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதேபோல் ஆசனூர் ஓங்கல்வாடி சாலையில் உள்ள தரைபாலத்தையும் காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்ததால் அங்கும் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெள்ளம் வடிந்த பிறகு வாகனங்கள் சென்றன. தரைபாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துதர மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.