சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கடல்போல் காட்சியளிக்கிறது


சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கடல்போல் காட்சியளிக்கிறது
x

சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கடல்போல் காட்சியளிக்கிறது.

காஞ்சிபுரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம், நேமம் ஆகிய ஏரிகளும் நீர் நிரம்பி காணப்படுவதால் இந்த ஏரிகளில் இருந்தும், மழைநீருடன் கிருஷ்ணா நதி நீரும் வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரி மளமளவென நிரம்பி வருகிறது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 22.70 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 608 கன அடியாகவும் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு ஒரு மணிநேரம் பெய்த கன மழையால் ஒரே நாளில் செம்பரம்பாக்கம் ஏரியில் 39 மில்லியன் கன அடி நீர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.


Next Story