கோவில்பட்டியில் இடி-மின்னலுடன் பலத்த மழை; சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி


கோவில்பட்டியில் இடி-மின்னலுடன் பலத்த மழை; சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
x

கோவில்பட்டியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அங்குள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அங்குள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

பலத்த மழை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதி கந்தக பூமியாகும். இதனால் வெப்பம் மிகுந்த இந்த பகுதியில் கோடை வெயில் முடிந்த பின்னரும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பாதசாரிகள் மீது மழைநீரை வாரி இறைத்தவாறு வாகனங்கள் சென்றன.

மேலும் மழை நீருடன், கழிவுநீரும் கலந்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், பஸ்- லாரி போன்றவை தண்ணீரில் நீந்திச் சென்றது போல மெதுவாக கடந்து சென்றது.

சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த பலத்த மழையால் கோவில்பட்டி நகரமானது வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்

கோவில்பட்டி- இளையரசனேந்தல் ரோடு ெரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

எட்டயபுரம்

எட்டயபுரம் பகுதியிலும் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் பஸ்நிலையம் அருகே தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள பெரிய விளம்பர பதாகைகள் விழுந்தது. 10-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தது. இதனால் மரங்களை ஒட்டியுள்ள மின் கம்பங்களும் சேதமடைந்ததால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மழை நின்ற பின்பு மின் வினியோகம் கொடுக்கப்பட்டது.


Next Story