நள்ளிரவில் இடி- மின்னலுடன் பலத்த மழை


நள்ளிரவில் இடி- மின்னலுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரத்தில் நேற்று முன்தினம் வெயில் சுட்டெரித்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென பலத்த காற்று வீசியது. அடுத்த சில நிமிடங்களில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் 2 மணியளவில் பெய்யத்தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததன் காரணமாக விழுப்புரம் நகர சாலைகளில் இருந்து பல்வேறு மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை ஓய்ந்ததும் நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று அந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இதேபோல் திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திருவெண்ணெய்நல்லூர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் கோடை வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

வேரோடு சாய்ந்த மரம்

சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டிவனம் கிடங்கல் 1-ல் 60 ஆண்டு பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதில் மின்கம்பமும் சாய்ந்து சரக்கு வாகனம் மீது விழுந்தது. மேலும் ஒரு வீட்டில் இருந்த குடிநீர் தொட்டி உடைந்து விழுந்ததால் சில வீடுகளின் ஓடுகள் சேதமடைந்தது.

மழை அளவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கஞ்சனூர்...................................51

நேமூர்..........................................49

விழுப்புரம்.................................36

முண்டியம்பாக்கம்...........35.50

செம்மேடு.............................22.80

அனந்தபுரம்........................20.40

கெடார்.......................................16

சூரப்பட்டு.................................15

வல்லம்.........................................14

வளவனூர்..................................12

வளத்தி.........................................12

கோலியனூர்.............................10

செஞ்சி...........................................6

முகையூர்.......................................3

மணம்பூண்டி.............................2


Next Story