தர்மபுரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 28.2 மி.மீ. மழை பதிவானது.
கனமழை
தர்மபுரி மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தர்மபுரி மாவட்டத்தில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சில இடங்களில் அதிகாலை வரை இந்த மழை நீடித்தது. மாவட்டத்தில் நேற்று அதிகாலை வரை சராசரியாக 12 மி.மீ. மழை பெய்தது. அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 28.2 மி.மீ. மழை பதிவானது.
விவசாயிகள் மகிழ்ச்சி
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
தர்மபுரி- 20, பாலக்கோடு- 12.4, மாரண்டஅள்ளி-7, பென்னாகரம்-11, ஒகேனக்கல்- 28.2, பாப்பிரெட்டிப்பட்டி-5.5. இந்த மழை காரணமாக நேற்று பகலில் வெயிலின் தாக்கம் குறைந்தது. மாலை நேரத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை நிலவியது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ஏரிகள், கிணறுகள், குளங்களில் நீர்மட்டம் சற்று உயர்ந்தது. விவசாய பணிகளுக்கு பயன்படும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையிலும், இந்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.