ஊத்துக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் கனமழை: மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ஊத்துக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வந்தது. வெப்பத்தின் தாக்கத்தினால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீர் என கருமேகங்கள் சூழ்ந்து. சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் சாலையில் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது. சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. சில பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
சூறாவளி காற்றுக்கு ஒதப்பை, பூண்டி, புல்லரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சாலையோரமாக இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. அந்தந்த பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பலத்த மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதைபோல பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், களாம்பாக்கம், மப்பேடு, கீழச்சேரி, பண்ணூர், கடம்பத்தூர், புதுமாவிலங்கை, அகரம், செஞ்சி, பானம்பாக்கம் ராமன் கோவில், எம்.ஜி.ஆர். நகர், நரசிங்கபுரம் போன்ற சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்தது.
திடீர் மழை காரணமாக கடும் வெயிலில் அவதிப்பட்டு வந்த மக்கள் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்.