திருத்தணியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை


திருத்தணியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
x

திருத்தணியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கடந்த சில நாட்களாகவே கடும் வெயில் வாட்டி வதைத்தது. வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருத்தணியில் நேற்று காலை முதலே வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று திருத்தணி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான கே.ஜி. கண்டிகை, மத்தூர், முருகம்பட்டு, கனகம்மாசத்திரம், ஆற்காடு குப்பம், திருவாலங்காடு போன்ற பகுதிகளில் திடீரென மேக மூட்டத்துடன் ஒரு மணிநேரம் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் திருத்தணி நகரில் அரக்கோணம் சாலை, திருத்தணி சென்னை சாலை, கீழ் பஜார் தெரு உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் சென்னை பைபாஸ் சாலையில் சாலையோரம் இருந்த மரம் நெடுஞ்சாலையில் விழுந்தது. இதனால் அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் திருத்தணி அடுத்த பெரியகடம்பூர் கிராமத்தில் திலகா என்பவரின் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர்.


Next Story