கனமழை எச்சரிக்கை எதிரொலி: மீட்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
கனமழை எச்சரிக்கை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மீட்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் படுத்தப்பட்டுள்ளனர்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகே உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அது புயலாக மாறும் என்று வானிலை மையம் கனித்துள்ளது. இதனால், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழையால் ஏதேனும் பாதிப்புகள் நேராமல் தடுக்க தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் 1,500 போலீசார், தேவையான மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
ரப்பர் படகுகள்
இதேபோன்று, விழுப்புரம் தீயணைப்பு வீரர்கள் தேவையான மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். அவசர கால மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், டயர் டியூப்புகள், கயிறு, பொக்லைன் எந்திரம், ஜெனரேட்டர், மரம் வெட்டும் எந்திரங்கள், மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்ட பல்வேறு மீட்பு உபகரணங்களுடன் தங்களை தயார் படுத்திகொண்டு இருக்கிறார்கள்.
மேலும் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளான மரக்காணம், பொம்மையார்பாளையம், நடுக்குப்பம், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தனித்தனி குழுக்களாக முகாமிட்டு தங்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி மழையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.