கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை...!
கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
கடலூர்,
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த சுழற்சியானது, ஆழ்ந்த காற்றழுத்த சுழற்சி பகுதியாக நிலவுவதால் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் கடந்த 10-ந்தேதி இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழையானது இடைவிடாது நேற்று முன்தினம் பகல் முழுவதும் கொட்டி தீர்த்தது.
பின்னர் மாலையில் சிறிது நேரம் ஓய்ந்திருந்த நிலையில், இரவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் மின்தடையும் செய்யப்பட்டது. பேய் மழைபோல் கொட்டிய இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
இந்தநிலையில் நேற்று மழை குறைந்த நிலையில் இன்று மீண்டும் கனமழை பெய்து வருகிறது. நெல்லிக்குப்பம், குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இத்னால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி கடும் அவதி அடைந்துள்ளனர்.குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.