மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது


மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது
x

சேலம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக காடையாம்பட்டியில் 167 மில்லி மீட்டர் மழை பதிவானது. எடப்பாடி பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக காடையாம்பட்டியில் 167 மில்லி மீட்டர் மழை பதிவானது. எடப்பாடி பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கனமழை

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. இரவு 8.30 மணி அளவில் லேசான தூறலுடன் பெய்ய ெதாடங்கிய மழை விடிய விடிய கனமழையாக கொட்டி தீர்த்தது. அதுவும் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது.

எடப்பாடி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 146 மில்லி மீட்டர் மழை பதிவானது. விடிய விடிய பெய்த மழையால் எடப்பாடி பகுதியில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. அதுவும் மோட்டூர் காட்டுவளவு பகுதியில் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த பொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர்.

சாலைமறியல்

விடிய விடிய பெய்த மழை ஓய்ந்த பிறகும் வீடுகளுக்குள் புகுந்த மழைவெள்ளம் வடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் மழைநீரை உடனே அகற்றக்கோரியும், வடிகால் வசதி அமைத்து தரக்கோரியும் எடப்பாடி பைபாஸ் சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதேபோல் பூலாம்பட்டி பகுதியில் மழைவெள்ளம் கரும்பு, நெல், பருத்தி, வாழை உள்ளிட்டவை பயிரிடப்பட்டு இருந்த விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சரபங்கா ஆற்றில் வெள்ளம்

ஓமலூர், காடையாம்பட்டி பகுதியில் சேலம் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக காடையாம்பட்டியில் 167 மில்லி மீட்டர் மழையும், ஓமலூரில் 122 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதனால் கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேற்கு சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் டேனிஷ்பேட்டை ஏரி, கோட்டேரிக்கு வெள்ளநீர் செல்கிறது.

இதனால் டேனிஷ்பேட்டை ஏரி மற்றும் கோட்டேரி வேகமாக நிரம்பி வருகிறது. அதேபோல் கிழக்கு சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் காமலாபுரம் ஏரிக்கு வெள்ள நீர் செல்கிறது. இந்த பலத்த மழையினால் சந்தைப்பேட்டை பகுதியில் சரபங்கா ஆற்றுநீர் வீடுகளில் புகுந்தது. இதபோல் தீவட்டிப்பட்டி, கலர்காடு உள்ளிட்ட பகுதியிலும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.

ஏற்காட்டில் மண் சரிவு

ஏற்காட்டில் கனமழை காரணமாக ஏற்காட்டில் இருந்து கொம்புத்தூக்கி மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் ஆத்து பாலம் என்ற இடத்திற்கு அருகில் மலைப்பாதையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சாலையில் அந்த நேரத்தில் வாகன போக்குவரத்து இல்லாத காரணத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

தொடர்ந்து மழை பெய்ததால் மண்சரிவு அதிகமாகி மேலும் பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை விரைந்து சீரமைத்து போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இந்த மழையால் மலைக்கிராமங்களில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மழைஅளவு

தேவூர் பகுதியில் பெய்த மழையால் கல்லம்பாளையம், மாரனூர், நாச்சம்பட்டி ஏரிகளில் தண்ணீர் நிரம்பி பெருக்கெடுத்து ஓடியது. இதுதவிர தேவூர் பகுதியில் குஞ்சாம்பாளையம் நாச்சம்பட்டி, ஒடசக்கரை, கல்வடங்கம், கொட்டாயூர், நல்லங்கியூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மழையால் சேதம் அடைந்த பயிர்களை வருவாய் ஆய்வாளர் சத்யராஜ் தலைமையில் வருவாய் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

காடையாம்பட்டி- 167, எடப்பாடி- 146, ஓமலூர்- 122, சங்ககிரி- 94, ஏற்காடு- 78.2, தம்மம்பட்டி- 75, ஆனைமடுவு-67, கரியக்கோவில்-62, சேலம்-61.5, பெத்தநாயக்கன்பாளையம்-42, ஆத்தூர்- 37.4, கெங்கவல்லி-30, வீரகனூர்-26, மேட்டூர்- 19.


Next Story