தேனியில் சூறாவளி காற்றுடன் கொட்டித்தீர்த்த கோடை மழை; கார் மீது மரம் விழுந்து ஒருவர் படுகாயம்


தினத்தந்தி 26 April 2023 3:00 AM IST (Updated: 26 April 2023 3:01 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் சூறாவளி காற்றுடன் கோடை மழை கொட்டித்தீர்த்தது. கார் மீது மரம் விழுந்து ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தேனி

தேனியில் சூறாவளி காற்றுடன் கோடை மழை கொட்டித்தீர்த்தது. கார் மீது மரம் விழுந்து ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கோடை மழை

தேனியில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகல் 11 மணி அளவில் சாரல் மழை பெய்தது. 10 நிமிடம் மட்டுமே இந்த சாரல் மழை நீடித்தது. பின்னர் வானில் கார் மேகம் சூழ்ந்து, மப்பும் மந்தாரமுமாக காட்சி அளித்தது. மாலை 3 மணி அளவில் சூறாவளி காற்று வீசியது. சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது.

கொட்டித்தீர்த்த கோடை மழையால் தேனி நகரில் உள்ள சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மதுரை சாலையில் அரண்மனைப்புதூர் விலக்கு அருகில் தண்ணீர் வடிந்து செல்ல வழியின்றி சாலையில் குளம்போல் தேங்கியது. இதனால் வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றன. பாதசாரிகள் தண்ணீரில் இறங்கி நடந்து சென்றனர்.

கார் மீது மரம் விழுந்தது

பலத்த காற்று வீசியபோது தேனி-போடி சாலையில் இருந்த நூற்றாண்டு பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து, அந்த வழியாக சென்ற கார் மீது விழுந்தது. இதில் அந்த காரை ஓட்டிச்சென்ற தேனி ரத்தினம்நகரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 58) என்பவர் காயம் அடைந்தார். கார் பலத்த சேதம் அடைந்தது. காருக்குள் இருந்து வெளியே வர முடியாமல் ராஜ்குமார் தவித்தார்.

மரம் விழுந்ததால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து கோடாங்கிபட்டி கிராமத்தை சேர்ந்த மக்களே களத்தில் இறங்கி மரத்தின் கிளைகளை வெட்டி, காருக்குள் இருந்த ராஜ்குமாரை மீட்டனர். படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மரத்தின் கிளைகளை வெட்டி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் பொதுமக்கள் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.

வீட்டின் மீது விழுந்த மரம்

மேலும் அரண்மனைப்புதூர் முல்லைநகரில் மகாலட்சுமி என்பவரின் வீட்டின் முன்பு இருந்த ஒரு மரம் வீட்டின் மேல் சாய்ந்தது. தகவல் அறிந்ததும் தேனி தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று அந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதேபோல் பெரியகுளம், கடமலைக்குண்டு, போடி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.


Related Tags :
Next Story