கொடைக்கானல் மலைப்பகுதியில் வெளுத்து வாங்கிய மழை; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அருவி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர் மழை
கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கொடைக்கானல் நகர் மற்றும் மேல்மலை பகுதியில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பழனி நகருக்கு குடிநீர் வழங்கும் கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏற்கனவே ஏரி நிரம்பிவிட்ட நிலையில், தற்போது அதிக அளவு தண்ணீர் வெளியேறுகிறது.
மேலும் நகரை ஒட்டியுள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, தேவதை அருவி, பியர் சோலா அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுதவிர பேரிஜம் ஏரி, மன்னவனூர் ஏரி, கூக்கால் ஏரி நிரம்பி வழிகிறது. கொடைக்கானலில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அப்சர்வேட்டரி பகுதியில் 68 மில்லி மீட்டரும், போர்ட்கிளப்பில் 51.4 மில்லி மீட்டரும் மழை அளவு பதிவானது.
வீடு இடிந்தது
இதேபோல் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இந்தநிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது. தாண்டிக்குடி அருகே பட்டலங்காடு பிரிவு பகுதியில் உள்ள மலைப்பாதையில் தடுப்புச்சுவர் இடிந்து சேதமடைந்தது.
இதனால் தாண்டிக்குடி-பட்டலங்காடு பிரிவு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கொடைக்கானல், பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்கள் பட்டலங்காடு பிரிவிலேயே திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் கனமழையால் விவசாய பயிர்களும் நாசமானது. காமனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கானல்காட்டை சேர்ந்த ராமுகாளை மனைவி அங்கம்மாளின் வீடு மழைக்கு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அங்கம்மாள் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.