நெல்லையில் கொட்டித்தீர்த்த கனமழை
நெல்லையில் நேற்று கோடை மழை கொட்டித்தீர்த்தது. அப்போது பால்வளத்துறை அலுவலகத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் நேற்று கோடை மழை கொட்டித்தீர்த்தது. அப்போது பால்வளத்துறை அலுவலகத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோடை மழை
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் ஆங்காங்கே திடீரென மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. வழக்கம்போல் நேற்று காலை முதலே வெயில் பாதிப்பு அதிகமாக இருந்தது. மதியம் மேக கூட்டங்கள் திரண்டு காட்சி அளித்தது. 12.45 மணிக்கு திடீரென்று பலத்த மழை பெய்யத்தொடங்கியது.
இந்த மழை 1.30 மணி நேரத்துக்கும் மேல் இடை விடாமல் கொட்டித்தீர்த்தது. அப்போது பயங்கர இடி சத்தத்துடன், மின்னல் வெளிச்சமும் காணப்பட்டது.
தண்ணீர் தேங்கியது
நெல்லையில் வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர், பேட்டை உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
வண்ணார்பேட்டை பாலத்தின் மேற்கு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் ஓட்டல்கள், டீக்கடைகள், பழக்கடைகள் உள்ளன. இந்த ரோட்டில் 3 அடி உயரத்துக்கு மழை தண்ணீர் குளம் போல் தேங்கியது. அந்த வழியாக வாகனங்கள் தத்தளித்தவாறு ஊர்ந்து சென்றன. பஸ் நிறுத்தத்துக்கு சென்ற பொதுமக்கள் மழைநீரில் நனைந்தபடி சென்றார்கள்.
திடீர் ஏரி
இதே போல் நெல்லை சந்திப்பு மதுரை ரோடு முழுவதும் திடீர் ஏரி போல் மாறி விட்டது. அந்த பகுதியில் மழை தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வடியவைத்தனர்.
மேலப்பாளையம் சந்தை முக்கு, ரெட்டியார்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை தண்ணீர் தேங்கியது.
பால்வளத்துறை அலுவலகம்
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பால்வளத்துறை அலுவலகத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் அலுவலகத்துக்குள் தண்ணீர் செல்வதை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அலுவலகத்துக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றினார்கள்.
அங்கு தற்போது ஊரக வளர்ச்சி முகமை புதிய கட்டிட பணி நடப்பதால் தண்ணீர் வழிந்தோட வழி இல்லாமல் பால்வளத்துறை அலுவலகத்திற்குள் புகுந்து விட்டதாக கூறினார்கள்.
இந்த அலுவலகமும், வேலைவாய்ப்பு அலுவலகமும் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வந்தன. இதில் வேலை வாய்ப்பு அலுவலகம், அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து பால்வளத்துறை அலுவலகம் மட்டும் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் பழமையான கட்டிடம் என்பதால் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தினார்கள்.
மின் தடை
இடி, மின்னல் மற்றும் காற்றும் வீசியதால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ஒருசில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, திருமால் நகர், நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை செந்தில் நகர் பகுதியில் மின் தடை ஏற்பட்டது.
மழை நின்றதும் மின் தடை ஏற்பட்ட பகுதிகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்றனர். உடனுக்குடன் மின் வினியோகத்தை சீரமைத்தனர்.
களக்காடு
இதேபோல் களக்காடு வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. நேற்று பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் களக்காடு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது மின்தடை ஏற்பட்டது.
சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றன. கனமழையால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழை அளவு
நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
சேரன்மாதேவி -2, நாங்குநேரி -70, பாளையங்கோட்டை -35, ராதாபுரம் -15, நெல்லை -23.