நெல்லையில் கொட்டித்தீர்த்த கனமழை


நெல்லையில் கொட்டித்தீர்த்த கனமழை
x

நெல்லையில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஒரே நாளில் 32 மில்லி மீட்டர் பதிவானது.

திருநெல்வேலி

நெல்லையில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஒரே நாளில் 32 மில்லி மீட்டர் பதிவானது.

சுட்டெரித்த வெயில்

நெல்லை மாவட்டத்தில் கோடை காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்தது. அக்னி நட்சத்திரம் காலத்திலும் தினமும் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது.

கடந்த 23-ந் தேதி பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 105 டிகிரி பதிவானது. இதனால் அவதிப்பட்ட பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் ஓரளவு வெப்பம் தணிந்து காணப்பட்டது.

நேற்று வழக்கம் போல் காலை முதல் மதியம் வரை வெயில் அடித்தது. மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டன.

இடி-மின்னலுடன் மழை

மாலை 3.30 மணி அளவில் திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த இந்த கனமழையால் நெல்லை சந்திப்பு பகுதி முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகனங்களில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்திலும் மழைநீர் தேங்கி கிடந்தது. இதேபோல் நெல்லை வண்ணாா்பேட்டை, டவுன், கரையிருப்பு, தாராபுரம், புதிய பஸ் நிலையம், பேட்டை, சுத்தமல்லி, ரெட்டியார்பட்டி, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

மின்தடை

அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, மானூர், மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

தொடர்ந்து 2-வது நாளாக நெல்லை மாவட்டத்தில் மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

அம்பை- 14, நெல்லை- 32, பாளையங்கோட்டை- 15, மணிமுத்தாறு- 2.


Next Story