நெல்லையில் பலத்த மழை


நெல்லையில் பலத்த மழை
x

நெல்லையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் பாபநாசம் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையொட்டி பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1,600 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. நெல்லை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது.

இதற்கிடையே கடந்த 3 நாட்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்தது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டதால் தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நெல்லையில் நேற்று மாலையில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. பின்னர் திடீரென்று பலத்த மழை பெய்தது. இந்த மழை இரவிலும் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.

இதனால் நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சந்திப்பு பஸ் நிலையத்தின் வடக்கு பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. அந்த வழியாக பஸ் மற்றும் வாகனங்கள் சிரமப்பட்டு கடந்து சென்றன. மேலும் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.


Next Story