குமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழை நாகர்கோவில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
குமரி மாவட்டத்தில் நேற்று மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நாகர்கோவில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நேற்று மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நாகர்கோவில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
குமரி மாவட்டத்தில் மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 15 மாவட்டங்களில் மிகக்கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் இந்த கனமழை எச்சரிக்கையில் குமரி மாவட்டம் இடம்பெறவில்லை. இதனால் நேற்று காலையில் இருந்து மதியம் வரை மாவட்டத்தில் வெயில் இருந்தது. மதியம் 1 மணிக்குப்பிறகு ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியது. நாகர்கோவில் நகரில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை 3 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்தது. இடையிடையே பலத்த மழையாகவும் பெய்தது.
சாலைகளில் ஓடிய மழைநீர்
இதனால் நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகளான மீனாட்சிபுரம் ரோடு, கோட்டார் ரோடு, செட்டிகுளம் ரோடு, பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி சாலை, கலெக்டர் அலுவலக சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. வடசேரி காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குள் மழைநீர் புகுந்தது. நாகர்கோவில் பார்வதிபுரம் பாலத்தின்கீழ் பகுதியில் உள்ள சாலையில் வெள்ளம் போல் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் சாலைகளில் வாகனங்கள் வெள்ளத்தில் ஊர்ந்தபடி சென்றன.
பள்ளி- கல்லூரிகளுக்கு சென்ற மாணவ- மாணவிகளும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்குச் சென்ற ஊழியர்களும் மழையில் நனைந்தபடி சென்றதையும், சிலர் குடைகளைப் பிடித்தபடி சென்றதையும் காண முடிந்தது.
இதேபோல் குளச்சல், தக்கலை, சுசீந்திரம், மணவாளக்குறிச்சி, ஆரல்வாய்மொழி, திருவட்டார், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைபகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதே சமயம் மார்த்தாண்டம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் ஆறுகள், கால்வாய்களில் மழை வெள்ளம் பாய்ந்தோடியது.
வீடு இடிந்தது
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழை விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 5.2, பெருஞ்சாணி அணை- 13, நாகர்கோவில்- 11.8, கொட்டாரம்- 3.2, தக்கலை- 4, பாலமோர்- 2.6, கோழிப்போர்விளை- 2.2, அடையாமடை- 19, முக்கடல் அணை- 1.4 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. இந்த மழையினால் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 570 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 122 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வினாடிக்கு 536 கன அடி தண்ணீர் உபரிநீராக திறந்து விடப்படுகிறது. நீர்மட்டம் 41.34 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 432 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நிர்மட்டம் 69.73 அடியாக உள்ளது. சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 211 கன அடி தண்ணீர் வருகிறது. வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 85 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 6 கன அடி தண்ணீரும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 9.9 கனஅடி தண்ணீரும் வருகிறது. மழையினால் கிள்ளியூர் தாலுகா பகுதியில் ஒரு வீடு இடிந்தது.
திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்றும் தடை விதிக்கப்பட்டது.