கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழை


கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழை
x
தினத்தந்தி 5 Jun 2022 9:26 PM IST (Updated: 5 Jun 2022 9:28 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் சுமார் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.

திண்டுக்கல்

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. மேலும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மழை குறைந்து இயல்பான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் திடீரென கருமேகங்கள் திரண்டு வந்து நகரமே இருள் சூழ்ந்தது. அதனைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. மேலும் இரவு வரை தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்ததால் பகல் நேரத்தில் கடும் குளிர் நிலவியது. கனமழை எதிரொலியாக வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. வெள்ளியை வார்த்து ஊற்றியதை போல வழிந்தோடிய தண்ணீரை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

இந்நிலையில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். மழை பெய்தபோதிலும், அதனை சுற்றுலா பயணிகள் பொருட்படுத்தாமல் சுற்றுலா இடங்களை கண்டுகளித்தனர். குறிப்பாக பிரையண்ட் பூங்கா, வெள்ளிநீர் வீழ்ச்சி, மோயர்பாயிண்ட் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.


Next Story