கள்ளக்குறிச்சி பகுதியில் பலத்த மழை


கள்ளக்குறிச்சி பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 16 Oct 2023 12:15 AM IST (Updated: 16 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் பசுமாடு பரிதாபமாக செத்தது.

கள்ளக்குறிச்சி

சுட்டெரித்த வெயில்

கள்ளக்குறிச்சியில் நேற்று காலையில் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பாதசாரிகள் சிலர் கையில் குடை பிடித்துக்கொண்டும், தலையில் தொப்பி மற்றும் துணியால் போர்த்திக்கொண்டும் சென்றதை காண முடிந்தது. மழை பெய்தால் தான் வெப்பம் தணியும் என்ற நிலை இருந்தது. பின்னர் மாலை 4 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டது. தொடர்ந்து 5 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதியில் குளம்போல் தேங்கியது.

வெப்பம் தணிந்தது

அரை மணி நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்தது. இதில் துருகம் சாலை, சேலம் மெயின்ரோடு, கச்சிராயப்பாளையம் சாலை, கடைவீதி உள்பட பல்வேறு சாலைகளில் மழைநீருடன் கழிவு நீரும் இரண்டற கலந்து வழிந்தோடியதால் துர்நாற்றம் வீசியது. இதனால் பாதசாாிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த மழையானது கள்ளக்குறிச்சி மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளிலும் பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சங்கராபுரம்

சங்கராபுரத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் அடித்து வந்த நிலையில் மாலை 5.30 மணி முதல் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு இருள்சூழ்ந்து காணப்பட்டது. பின்னா் இடி மின்னலுடன் பலத்தமழை பெய்தது. இதே போல் சங்கராபுரம் அருகே உள்ள பாண்டலம், குளத்தூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

மின்னல் தாக்கி

கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி ராணி என்பவர் தனக்கு சொந்தமான பசுமாட்டை மேய்ச்சலுக்காக நேற்று வயல்வெளி பகுதிக்கு ஓட்டிச்சென்றார். அப்போது மாலையில் பெய்த மழையின்போது மின்னல் தாக்கி பசுமாடு சம்பவ இடத்திலேயே செத்தது.


Next Story